ஆட்டிசம்(Autism): பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்
ஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும். இக்கட்டுரையும் இதைத்தான் சொல்கிறது.
இன்று கற்பித்தலில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ஐ.ஈ.பி முறை (IEP-Individualized Education Program) தேவை என்கிறார்கள். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆய்ந்து அதற்கு தகுந்தார்ப்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி.
நுண் இயங்குதிறன், பேச்சுப் பயிற்சி, நடப்பது, கவனக்குவிப்பு, கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல் போன்ற செயல்கள் எல்லாமே மற்ற குழந்தைகளுக்கு இலகுவானதாக இருக்கலாம். இவை ஆட்டிச(Autism) நிலையாளர்களுக்கு பெரும் சவாலானவை. இதற்கு இந்த ஐ.ஈ.பி முறை பெரிதும் உதவும். இதற்காகவே நாம் பலதரப்பட்ட தெரபி வகுப்புகளையும் தெரபிஸ்டுகளைத் தேடி ஓடுகிறோம்.
அங்கு கற்றுக் கொடுக்கப்படுபவை மட்டும் குழந்தையிடம் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுமா? எனில் நிச்சயம் இல்லை, என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எந்தத் தெரபி வகுப்புக்குச் சென்றாலும் பயிற்சி அதிக பட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கும். மற்ற நேரங்களில் வீட்டிலோ, பள்ளியிலோதான் குழந்தை இருக்கும். அந்த சமயங்களில் எதுவுமே செய்யாமல் விட்டுவிடுகின்றனர் பல பெற்றோர். இதன் காரணமாக குழந்தையிடம் இருக்க வேண்டிய முன்னேற்றம் தாமதமாகிறது.
ஆட்டிசம் என்று அடையாளம் காணப்பட்ட பின், ஆகுபெஷனல் தெரபி, ஸ்பெஷல் எஜுகேஷன், ஸ்பீச் தெரபி எல்லாம் முக்கியம்தான். கூடவே ADL(Activities of Daily Living) என்று சொல்லப்படுகின்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியது மிக அவசியமும்கூட. ஏனெனில் ஏ.டி.எல் பயிற்சிகள் மட்டுமே பிறரின் உதவியின்றி, அவர்களின் தேவைகளை அவர்களாகவே செய்துகொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றன
இதனை பள்ளியோ, தெரபி வகுப்புகளோ முழுமையாக கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே இங்கே முதன்மையானது என்பதை ஆட்டிசநிலைக் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும்.
குழந்தை, பத்து வயத்தை அடைந்துவிட்டால், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதும், பதிமூன்று வயதை அடைந்துவிட்டால் வொகேஷனல் வகுப்பு (vocational education) எனப்படும் தொழிற்கல்வியின் பக்கம் சென்றுவிடுதலும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
இவை எல்லாம் எல்லா ஆட்டிச நிலை குழந்தைகளுக்கான பொது விதி அன்று. முன்னமே சொன்னதுபோல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித் திறன் பெற்றவர்களாகவே இருப்பர். அதை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோர் தான் அவர்தம் குழந்தைக்கு எது ஏற்றது என்ற முடிவை எடுக்கவேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். ஆட்டிச நிலையாளர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளின் பட்டியலைப் பெற்றோர் தயாரித்து வைத்துக்கொண்டு, அதன்படி அவர்களை செயலாற்றச் செய்வது என்பது நன்மை பயக்கும்.
இதனை சிறுவயதிலிருந்தே பின்பற்றினால், பிள்ளை வளர வளர அடுத்தடுத்த பணிகள் என்று நீண்ட பகலில் அவர்களை எப்போதும் பிஸியாகவே வைத்துக்கொள்ள முடியும். அவர்களும் அதற்கு பழகிவிடுவர். பள்ளியோ, சிறப்புப் பள்ளியோ எங்கு செல்பவராக இருந்தாலும் வீட்டிலும் பிள்ளைகள் செய்வதற்கென்று கொஞ்சம் பணிகளை எப்போதும் வைத்திருங்கள்.
அனேக பள்ளிகள் 15 அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. கற்றுக் கொள்வது பல பிள்ளைகளுக்கும் பிடிப்பதில்லை. பள்ளி செல்லக்கூட மறுக்கலாம். அந்த சமயங்களில் வீட்டில் நீங்கள் புதியதாக எதையும் பழக்கிவிட முடியாது. சிறுவயதில் இருந்தே பட்டியல் தயாரித்து அதன்படி அவர்களை தினசரி நடவடிக்கைகளுக்கு ஒழுங்கு செய்திருந்தால் பதின்மவயதில் அவர்களை இலகுவாகக் கையாள முடியும்.
இதுபற்றி மேலும் அறிய, உங்கள் குழந்தையின் சிறப்பாசிரியர், தெரபிஸ்டுகளிடம் பேசுங்கள். திட்டமிடுங்கள். செயலாற்றுங்கள்.
ஆட்டிச நிலைச் சிறுவர்களின் பெற்றோர் அவசியம் செய்ய வேண்டியவை என நான் நினைக்கும் சில விஷயங்களைப் பட்டியலிடுகிறேன். இது குழந்தையின் முன்னேற்றத்தை உறுதி செய்து கொள்ளவும், அவர்களை நாம் புரிந்து கொள்ளவும் உதவும்.
1. டைரி தயாரிக்கவும்.
ஆட்டிச நிலைக்குழந்தையின் தினசரி நடவடிக்கைகளை எழுதி வாருங்கள். காலையில் எழுந்தது முதல், சிற்றுண்டி, மதியவுணவு, இரவு உணவு என உணவு விபரம், வெளியில் சென்று வந்த விபரங்கள். பிள்ளையின் மனநிலை பற்றி பதிவு செய்யுங்கள். பிடிவாதம், காரணமற்ற கோபம் / அழுகையின் பின்னால் இருக்கும் காரணங்களை உணர்ந்துகொள்ள பெரும் உதவியாக இருக்கும்.
2. வழக்கமான அஸெஸ்மெண்ட் (மதிப்பீடு).
ஆண்டுக்கொரு முறை தவறாமல் அஸெஸ்மெண்ட் சென்று வாருங்கள். குறிப்பாக எல்லாத் துறை வல்லுனர்களையும் ஒரே குடையின் கீழ் சந்திக்கக் கிடைக்கும் நிப்மெட் (சென்னை முட்டுக்காடு பதியில் உள்ள மத்திய அரசு நிறுவனம்) மாதிரியான இடங்கள் சிறந்தது.
3. இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்குங்கள்.
ஆட்டிச நிலையாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் எந்த ஒரு திறனையும் அவர்கள் உடனேயே கப்பென்று பிடித்துவிடுவார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அதனால் சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் கற்றுத் தர முயற்சித்தல் அவசியம். அப்போதும் அவர்கள் அதற்கு தயாராகவில்லையா, மூன்றோ ஆறோ மாதங்களுக்குப் பின் மீண்டும் பயிற்சியைத் தொடங்குங்கள். – இன்று வராதது ஆறு மாதம் கழித்து சுலபமாக வருவதுண்டு.
4. பயணம் தேவை.
பொதுவாக பயணங்களை ஆட்டிச நிலையாளர் விரும்புவதைப் பார்க்கலாம். உள்ளூரிலோ, வெளியூருக்கோ அடிக்கடி பயணம் செல்லுங்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அவர்கள் விரும்புவது பயணத்தை மட்டுமே! பயணம் செய்து போகும் ஊரையோ, அங்கிருக்கும் மலர் கண்காட்சிகளையோ ரசிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் போகும் பயணத்தை ரசிப்பார்கள்.
அதேபோல் பல சந்தர்ப்பங்களில் இவை கடினமாகவே இருக்கும். இருந்தாலும் ஒரே மாதிரியான, பயணங்கள் அதிகமாக அழைத்துச் செல்லுங்கள். அது இக்குழந்தைகளுக்கு தரும் பலன் மிகவும் அதிகம்.
5. பேசுங்கள்.
கடவுளிடம் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம். எந்த கடவுளாவது பதில் பேசி இருக்கிறதா? இல்லையே! அதுபோல நீங்களும் உங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து பேசுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களின் செயல்பாடுகள், நமக்கு ஏற்படுத்திய மகிழ்ச்சி, வருத்தம் என எல்லாவற்றையும் பேசுங்கள். நீங்கள் சொல்வது அவர்களுக்குப் புரியாது என்று நீங்களாக முடிவு செய்யாதீர்கள். அவர்களால் பதில் பேச முடியாவிட்டாலும், நம்மை கவனிக்காவிட்டாலும் நாம் பேசுவது அவர்களுக்கு புரியும் என்று நம்புங்கள். (பல ஆட்டிச நிலையாளர்களின் சுய குறிப்பின் மூலம் அறிந்துகொண்ட செய்தி இது)
6. புதிய உறவுகளை ஏற்படுத்துங்கள்.
உங்கள் குடும்பத்தவர் தவிர நட்பு வட்டங்கள், அடுத்த கட்ட உறவுகளிடம் உங்கள் பிள்ளையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துங்கள்.
இச்சமூகத்தில் ஆட்டிசக் குழந்தை என்றாலே ஓர் அச்சத்துடன் அணுகுகிறார்கள். முதலில் நம் சுற்றத்தில் அவர்களின் அச்சத்தைப் போக்கவேண்டும்.
இதில் நமக்கும் ஒரு நன்மை உண்டு. ஒரிரு மணி நேரமோ அல்லது ஒரிரு நாட்களோ அவர்களுடன் நம் பிள்ளை இருக்க முடியுமா என்பதை முயற்சித்து பாருங்கள்.
அவசர காலங்களில் என்னைத் தவிர வேறு யாரிடமும் அவன் சாப்பிடமாட்டான் என்பது போன்ற கவலைகளைத் தவிர்க்க இது உதவும்.
நம்பிள்ளை, அக்கம் பக்கத்தவர் அல்லது நண்பர்களிடன் சில மணி நேரமோ, ஒரு நாளோ இருந்து கொள்ள முடியும் என்பது ஆட்டிச நிலைப்பெற்றோருக்கு மிகப் பெரிய பலம்.
7. தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைக் கொடுங்கள்.
உணவு, உடை உட்பட அவர்களின் முன்னால் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புக்களை வைத்து, அதில் ஒன்றை தேர்வு செய்யச் சொல்லுங்கள்.
தோசையா, இட்லியா என்று கேட்பதாக இருக்கட்டும், ஆடைகளின் வண்ணம் பற்றியதாக இருக்கட்டும். ஆட்டிச நிலைப்பிள்ளைகளுக்கும் தேர்வு செய்யத் தெரியும் என்று நம்புங்கள்.
தொடக்கத்தில் அவர்களால் முடியாது போகலாம். ஆனால் தொடர்ந்து செய்துவரும்போது பிடித்தமானவற்றை சுட்டிக் காட்ட பழகிவிடுவர்.
8. பெற்றோர் குழுமங்கள்
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பல பெற்றோர் குழுமமாக செயல்படுகின்றனர். அவற்றில் இணைந்து கொள்ளுங்கள். பல சமயங்களில் மற்றவரின் குழந்தை வளர்ப்பு அனுபவங்களும் உங்களுக்கு உதவக்கூடும்.
9. வாரம் ஓர் அவுட்டிங்
எது நிகழ்ந்தாலும் எதைப்பற்றியும் கவலைப் படாமல் வாரம் ஒரு நாள் சில மணி நேரங்கள் வீட்டில் இருந்து குழந்தையை வெளியே அழைத்துச் செல்வது என்ற வழக்கத்தைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
கடற்கரை, ஷாப்பிங் மால்கள், நண்பர்களின் வீடுகள், சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள் என்று கொஞ்ச தூரம், வாரம் ஒரு முறை சென்று வருவது, ஆட்டிச நிலைக் குழந்தைகளின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். பழகியபின் அந்த நாளுக்காக அவர்கள் ஏங்க ஆரம்பிப்பர்.
10. பெற்றோர் என்றால் ஒருவர் அல்ல இருவர்!
ஆட்டிச நிலைக்குழந்தைகள் உள்ள பல வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய குறை என்ன தெரியுமா? தாயோ, தந்தையோ மட்டும் பிள்ளை வளர்ப்பின் பொறுப்புக்களை எடுத்துக்கொள்வது. அது கூடாது.
மற்ற குழந்தைகள் வளர்ப்பதைப்போல் பொறுப்புக்களை பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் பலர் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக நம் குழந்தைகளுக்கு தாய், தந்தை இருவரின் பங்களிப்புமே அவசியம்.
இப்படி இருவரும் புரிந்து கொண்டு குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் போது, சில ஆண்டுகளில் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணமுடியும்.
ஆட்டிச நிலைக்குழந்தையின் வளர்ச்சிக்கான மந்திரச்சாவி பெற்றோரிடமே உள்ளது. அதை வெளியில் தேடவேண்டாம். ஆக, எப்போதும் எல்லாவற்றிலும் தாயும் தந்தையுமாக இணைந்து பணீயாற்றுங்கள். ஒரே ஒருவரின் தலையில் பொறுப்புக்களைக் கட்டவேண்டாம்.
(நன்றி: செல்லமே மாத இதழ் – ஏப்ரல்-2018)